Showing posts with label Tamizh. Show all posts
Showing posts with label Tamizh. Show all posts

Wednesday, July 27, 2022

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

 Fecha: 27 de Julio 2022


Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil vive en el sur de India.  Tambíen, les viven en el Norte y el Este de Sri Lanka, Singapore, Malaysia.  Desde hace que el Diciembre de 2006 estoy una estudiante de Español.  Aquí, les voy a contar en Español la historia de la epopeya más famosa en Tamil, se llama, Silapathikaram del siglo V o VI AD.  Se traduce a Español como 'El Capitulo de la Tobillera' la palabra 'Silapathikarm'.  El autor de Silapathikaram fue un Santo de Jainismo, se llamó, Ilangoadigal. 

La belleza de la epopeya Silapathikaram es: Hay tres partes mayores, hay tres personajes principales - Kannagi, Kovalan y Madhavi, describe tres ciudades - Poompuhar, Madurai y Vanji, describe tres reinos mayores de Tamil - Chera, Chola o Choza, Pandya, incluyo tres religiones de la gente Tamil - Hinduismo, Buddhismo y Jainismo, transmite tres verdades universales, ha sido escrito en tres facetas del idioma Tamil - prosa, poesia y drama

La historia de Silapathikaram comenza en el pueblo de Poompuhar, que está en el sur de India y es el pueblo donde el río Cauvery desemboca en el mar.  Vivían dos hombres de negocios ricos en Poompuhar, se llamaron, Maasaathuvaan y Maanaaicken.  Maanaaicken tenía una hija, se llamó, Kannagi, que es la heroína de esta epopeya.  Cuando la tenía doce años Kannagi, se casó con Kovalan, el hijo de Maasaathuvaan de decíseis años.  Kovalan es el héroe de la epopeya.  El pueblo entero de Poompuhar assitió la boda de Kannagi y Kovalan. 

Después de su matrimonio, les vivieron felices por un tiempo Kovalan y Kannagi.  Un día les fueron a una programa de baile Kovalan y Kannagi.  La bailarina fue Madhavi, que es el tercer personaje principal de esta epopeya.  Madhavi era tan hermosa que Kovalan fue seducido instantáneamente por la belleza de Madhavi.

Después de la programa de baile, Kovalan visitaba regularmente a Madhavi en su casa.  El nombre de la madre de Madhavi fue Chitrapathi.  El oficio de la familia materna de Kannagi fue bailar delante de los Reyes y los peces gordos del pueblo.  Tambíen, las mujeres en la familia materna de Madhavi sirvirían como las concubinas del Reyes y los hombres ricos del pubelo.  Por lo tanto, ninguno de los niños no sabría quién los engendró.  Madhavi no tampoco sabía su padre ni su nombre.   

Poco a poco Kovalan olvidaba su esposa jovena Kannagi y seguía vivir en la casa de Madhavi.  Madhavi nunca quiso seguir los pasos de su mamá.  Ella quiso casarse con un hombre y vivir con él por siempre como una mujer virtuosa.  Ya que Madhavi amaba Kovalan tanto, se casó con Kovalan y dió a luz a una bebé, se llamó, Manimekalai.  Actualmente el nombre Manimekalai fue el nombre de la Diosa de la familia de Kovalan.  

Mientras la vida de Kannagi sin su esposo fue tan patetica.  La mamá de Madhavi, que era una mujer malvada, le robó a Kannagi todas sus joyas y riquezas diciéndole que su queridisimo esposo, Kovalan, las queria para él.  Ya que la inocente Kannagi amaba tanto su esposo, Kovalan, era fácil para la malvada mamá de Madhavi robarle a Kannagi.  

La vida marital de Madhavi con su esposo había sido luz de luna y rosas hasta el día en que ambos asistieron a una feria comerical en Poompuhar.  Ellos se divirtieron en la feria.  Kovalan insistió en que Madhavi cantaría una canción.  Madhavi tocaba alegremente el instrumento musical veenai y cantaba una canción en Tamil.  

Para burlarse de su esposo, Madhavi cantó una canción alabanza al rey de Poompuhar en lugar de cantar una canción alabanza a Kovalan.  Como era Madhavi de nacimiento innoble, Kovalan malinterpretó que Madhavi había estado clandestinamente enamorada del Rey de Poompuhar, ya que una mujer Tamil virtuosa nunca cantaría una canción alabando a un hombre que no sea su esposo.

Kovalan instantáneamente dejó Madhavi a la feria comerical y llegó la casa de Kannagi.  Kannagi le dió la bienvenida y aceptó de todo corazón a Kovalan.  Kovalan llegó a saber de que la malvada madre de Madhavi le había robado a Kannagi todo de su riqueza excepto un par de la tobilleras de plata.  

Pronto, Kovalan y Kannagi decidieron dejar su lugar Poompuhar, que estaba bajo el Reino de Cholas o Chozas, para ir a la ciudad de Madurai en el Reino de Pandyas a ganarse la vida por vendiendo las tobilleras de plata.  Después de llegar Madurai, Kovalan tomó una de las tobilleras de Kannagi para empeñarlo con el orfebre.  Era el orfebre único del Reino.

En ese tiempo, la Reina del Reino de Pandya había perdido una de sus tobilleras.  Cuando Kovalan fue al orfebre con solo una de tobilleras en lugar de un par de tobilleras, confundió a Kovalan con el ladron que había robado una de las tobilleras de la Reina.  El orfebre pronto informó mal al Rey que había atrapado el ladron.  El Rey sin hacer ninguna investigación ordenó matar a Kovalan por decapitando.  Los sirvientes decapitaban Kovalan en seguida.

Cuando Kannagi llegó a saber del asesinato de su esposo inocente, se puso tan furiosa que entró en la corte del Rey, con la única tobillera que tenía, y agredió verbalmente por su error grave.  Las tobilleras de Kannagi tenían cuentas de rubíes, mientras las tobilleras de la Reina tenían cuentas de perlas.  

Frente a los todos en la corte, la Reina se rompió una de sus tobilleras y de ella salieron las cuentas de perlas.  Cuando Kannagi se rompió la única tobillera que tenía, salieron las cuentas de rubíes de ella.  Todos en la corte sorprendieron al ver las cuentas de rubíes de la tobillera de Kannagi.  Furiousa Kannagi le pidió a la Reina que rompiera la otra tobillera que le arrebataron a Kovalan.  Cuando la Reina hizó así, las cuentas de rubíes salieron de esa tobillera.  

El Rey se sintió avergonzado por su error gravo al ordenar el asesinato de inociente Kovalan.  El Rey murió instantáneamente de pura verguenza y conmoción total.  La Reina murió de conmoción total poco después de la muerte de su esposo.  

Furiosa Kannagi se arrancó una de sus pechugas y prendió fuego a todo de la ciudad de Madurai.  Luego Kannagi llegó a Vanji, una ciudad en el Reino de Cheras, donde conoció a su esposo, quien descendió del cielo en un avión y ambos llegaron al cielo juntos

Espero sinceramente sus comentarios y opiniones sobre mi narración en Español de la epopeya Tamil más famosa



Tuesday, January 1, 2008

தமிழ் எண்களை அறியாத் தமிழர்கள்

நாள்: 07.01.2008

தமிழ் மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் எத்துணைப் பேர் தமிழ் மொழியில் எண்கள் உள்ளன என்பதனை அறிவர்? அப்படியே தமிழில் எண்கள் உள்ளன என்னும் தகவலினை அறிதவர்களில் எத்துணைப் பேர் அவ்வெண்களை அறிவர்?

தமிழகத்தின் அண்டை மாநிலம் ஒன்றில் வாழும் தமிழ்ப் பெண்ணான நான் நாள் தோறும் நான் வாழும் நகரத்தில் ஓடும் மாநகரப் பேருந்துகளைக் காணும் போது அப்பேருந்துகளின் பெயர் மற்றும் எண்களைத் தாங்கி வரும் ஒவ்வொரு பலகையிலும் பேருந்துகளின் எண்கள் அம்மாநிலத்தின் ஆட்சி மொழியிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறேன்.

ஆதலால், அம்மொழியினை முறையாகக் கற்காத வெளிமாநிலத்துப் பெண்ணான என்னால் கூட அம்மொழியிலுள்ள எண்கள் அனைத்தையும் எளிதில் கற்க இயன்றது.

மேலும் எனக்குத் தெரியவந்த மற்றுமொருத் தகவல் யாதெனின் இம்மாநில மொழியினைப் பயிலும் பிள்ளைகள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி நிலையிலேயே அம்மொழியின் எண்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு நிலைமை இவ்வாறு இருக்க நல்ல கல்வி அறிவு பெற்றத் தமிழர்கள் கூட தமிழில் எண்கள் உள்ளன என்னும் அடிப்படைத் தகவிலினைக் கூட அறியாமல் உள்ளனர்!!

நான் தொடக்கப் பள்ளியிலிருந்து இளம் அறிவியல் இரண்டாம் ஆண்டு வரை முறையாகத் தமிழ்ப் பயின்றேன். ஆயினும் நான் தமிழ் எண்களை எந்தத் தமிழ் ஆசிரியரிடமோ அல்லது பேராசிரியரிடமோ கற்கவில்லை. நான் என் விடா முயற்சியாலும் கடவுளின் நல்லருளாலும் நூலக நூல்கள் மு°லமே அவற்றை அறிந்துக் கொண்டேன்.

இந்நேரத்தில் என்னை மிகவும் வேதனை அடைய வைத்த ஒருத் தகவலினை நான் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். என்னுடன் பணிபுரியும் வேதியியலில் பண்டாரகர் பட்டம் பெற்றத் தமிழர் ஒருவர் வேற்று மொழியினைத் தாய் மொழியாகக் கொண்ட மற்றுமோர் உடன் பணிபுரிபவரிடம் பின் வருமாறு ஒரு முறைக் கூறினார்:

"உங்கள் மொழியில் உங்கள் மொழிக்கென உரிய எண்கள் உள்ளன. ஆனால், மிகவும் பழைமையான, சிறந்த இலக்கிய வளமுள்ள மொழியாகப் போற்றப் படும் எங்கள் தமிழ் மொழியிலோ அவ்வாறு ஏதுமில்லை!".

பின் அத்தமிழரிடம், அவருக்குக் கீழ் பணிபுரியும், நான் எடுத்துக் கூறி அவ்வெண்களை அவருக்கு அறிமுகமும் செய்து செய்தேன்.

தமிழகத்திலேயே நம் மொழியின் இந்த அவல நிலையினை என்னென்று சொல்வது? இந்தியா விடுதலை அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை தமிழகத்தை ஆண்ட ஓர் அரசும் இதைப் பற்றி எவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் இருந்தது?

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் தான் என்ன? தமிழ் எண்கள் வெறும் சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு மட்டும் தானா? மேலும், தமிழ் மொழியினைத் தட்டச்சு செய்ய உதவும் இணையத்தளங்கள் பலவற்றிலும் தமிழ் எண்களுக்கென விசைகள் கிடையாது. தமிழ்த் தட்டச்சினை முறையாகப் பயின்ற நான் என்றுமே தமிழ்த் தட்டச்சுப் பொறிகளில் தமிழ் எண்களைத் தட்டச்சு செய்வதற்குரிய விசைகளை கண்டதில்லை!

எண்ணும் எழுத்தும் கண் என்கிறது உலகப் பொது மறை

Monday, December 31, 2007

திருவாசகம் - புகழ் மாலை

நாள்: 31.12.2007

திருவாசகம் என்றவுடன் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும் தொடர் யாதெனின், "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்".

பள்ளியறையில் திருவாசகத்தினைப் பயின்ற அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் அவர்கள் அதன் சிறப்பினை எவ்வாறு கூறுகிறார் என்று இவண் காண்போம்.

வான் கலந்த மாணிக்க வாசக
நின் வாசகத்தை நான் கலந்து
பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து
ஊன் கலந்தென் உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பதுவே!


மாணிக்க வாசக நின்
வாசகத்தை நான் கலந்து
பாடுங்கால் ஆங்கிருந்த கீழ்ச்சாதி
பறவைகளும் வேட்டமுறும் பொல்லா
விலங்குகளும் மெய்ஞான நாட்டமுறும்
எனில் நானடைதல் வியப்பன்றே


நான் இத்திருவாசகத்தினைப் படித்துப் பயன்பெறும் அளவிற்குத் தமிழில் புலமைப் பெறவில்லை!

ஓர் எழுத்து ஒரு மொழி

நாள்: 31.12.2007

நம் தாய் மொழியாகிய நற்றமிழில் மொத்தம் நாற்பத்திரண்டு ஓர் எழுத்து ஒரு மொழிகள் (ஓர் எழுத்துச் சொற்கள்) உள்ளன. அவற்றில் நான் நன்கு அறிந்தவற்றை இவண் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். அவை பின் வருமாறு:


* ஆ - பசு

* ஐ - எண் ஐந்து

* ஓ - வியப்பு

* கா - சோலை

* பூ - மலர்

* கோ - அரசன்

* போ - செல்

* நொ - துன்பம்

* கை - உறுப்பின் பெயர்

* தை - மாதம் மற்றும் தையல் தொழில் இரண்டையும் குறிக்கும் சொல்

* பை - பெயர்ச்சொல்

* மை - அழகுப் பொருள்

* வை - இடு

* மா - பழத்தின் பெயர் மற்றும் "பெரிய"

* பா - பாடல்

* ஈ - ஒரு வகைப் பூச்சி

* தா - கொடு

* வா - வருதல்

* நா - உடல் உறுப்பு

* சீ - இழிச் சொல்

* தூ - இழிச் சொல்

* தீ - நெருப்பு

* நீ - முன்னிலைப் பெயர்ச் சொல்

* மூ - எண் மூன்று

மீதம்முள்ள சொற்களைத் தாங்கள் அறிவீராயின் தயக்கம் ஏதுமின்றி எனக்குத் தெரியப்படுத்துமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்

ஒரு நாள் ஒரு குறள்

நாள்: 31.12.2007

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் உலகு


(நெருநல் - நேற்று)

பொருள்: இவ்வுலகத்தின் பெருமை யாதெனின் நேற்று உயிருடன் இருக்கும் ஒருவர் இன்று இருக்கமாட்டார் என்பதேயாகும்

(இத்திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்தத் திருக்குறள்களில் ஒன்றாகும். உலக நிலையாமையினை வள்ளுவப் பெருந்தகையவர்கள் ஒன்றரை அடியில் விளங்க வைத்துவிட்டார்கள்)

Friday, December 7, 2007

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு - தமிழில்

நாள்: 07.12.2007

பின் வரும் சிறுகதையானது பிரபல அமெரிக்க ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளராகிய ஒ. என்ரி என்றழைக்கப்படும் வில்லியம் சி்ட்னி போர்ட்டர் என்பவரால், "After Twenty Years" என்னும் தலைப்பில் எழுதப்பட்டதாகும். இச்சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஆங்கிலச் சிறுகதையாகும். அதனை இவண் தமிழில் காண்போம்.

ஒரு நாள் ஒரு காவலர் நியு யார்க் நகர வீதிகளில் இரவு பத்து மணி அளவிற்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அவர் பூட்டப்பட்ட கடையின் முன் ஒரு மனிதன் நிற்பதைக் கண்டார். அவனிடம் சென்று அவன் எதற்காக கொட்டும் பனியையும் பொருட் படுத்தாமல் அங்கு நின்றுக் கொண்டிருந்தான் என்று வினவினார்.

அதற்கு அம்மனிதன் தன் பெயர் பாப் என்றுக் கூறி புகைக் குழாயினைப் பற்ற வைத்தான். அதில் அவன் முகத்தினைக் காவலரால் காண முடிந்தது. அவன் முகத்தைக் கண்ட அவர் அவன் ஒரு பெரிய பணக்காரனான இருக்க வேண்டும் என்பதனை அவன் அணிந்திருந்த உடை மற்றும் கணையாழியின் மு°லம் ஊகித்துக் கொண்டார். பிறகு அவன் அவரிடம் பின்வருமாறு கூறினான்:

"நானும் ஜிம்மி வெல்சும் உற்ற நண்பர்கள். எங்கள் இருவரைப் போன்ற உற்ற நண்பர்களை எங்கும் காண இயலாது. எங்களுக்குள் மனக் கசப்பு என்றும் ஏற்பட்டதே கிடையாது. இருபது ஆண்டுகளுக்கு முன் நான் பதினெட்டு அகவை நிரம்பிய வாலிபனாக இருந்தேன். என் நண்பன் ஜிம்மி வெல்சு இருபது அகவை நிரம்பிய வாலிபனாக இருந்தான். நாங்கள் இருவரும் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளில் இதே இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டோம். அதன் படி சரியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இருவரும் உயிரோடு இருந்தால், நாம் எங்கு இருந்தாலும் எவ்வளவுத் தொலைவில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் இதே இடத்தில் இதே நேரத்தில் ஒருவரை யொருவர் சந்திக்க வேண்டும். இன்று அந்நாளாகும். நாங்கள் இருவரும் இதே இடத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் இரவு பத்து மணியளவிற்கு அவ்வாறு ஒப்பந்தம் செயதுக் கொண்டு பிரிந்துச் சென்றோம்".

அவர் பாபிடம், ஜிம்மி வெல்சுடன், பிரிந்துச் சென்ற பிறகு அவன் தொடர்பு ஏதாவது வைத்திருந்தானா என்று வினவினார். அதற்கு அவன் அவர்கள் இருவரும் பிரிந்துச் சென்றவுடன் அவன் பிழைப்புத் தேடி மேற்கு நோக்கிச் சென்றதாகவும் ஆனால் ஜிம்மி வெல்சு மட்டும் நியு யார்க் நகரிலேயே இருந்து விட்டதாகவும் கூறினான். மேலும், பிரிந்துச் சென்ற பின் ஓரிரு ஆண்டுகள் வரை மட்டும் அவர்கள் இருவருக்குமிடையில் தொடர்பு இருந்ததாகவும் கூறினான்.

காவலர் மணி பத்தைக் கடந்து விட்டதாகவும் இனியும் அவன் நண்பன் ஜிம்மி வெல்சு அங்கு வருவான் என்ற நம்பிக்கை அவனிற்கு உள்ளதா என்று வினவினார். அதற்கு பாப், "என் நண்பன் ஜிம்மி உயிருடன் இருந்தால் தவறாமல் என்னைக் காண வருவான்" என்றான். பிறகு அடுத்த அரை மணி நேரம் வரை தன் ஜிம்மிக்காக காத்திருக்கப் போவதாகவும் கூறினான். பிறகு காவலர் அவனிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டார்.

பாப் தன் உயிர்த் தோழன் ஜிம்மிக்காக ஆவலுடன் ஒவ்வொரு நிமிடமாகக் காத்திருந்தான். சற்று நேரத்தில் ஒரு உயரமான மனிதன் தலையில் தொப்பியுடனும் உடம்பில் குளிர்கால உடையுடனும் எதிரில் வந்துக் கொண்டிருந்நதான். அவன் அவ்வாறு வந்துக் கொண்டிருக்கையில் பாப்பை நோக்கி, "அது நீ தானா பாப்?" என்று வினவினான். பாபும் உடனே, "யார் ஜிம்மியா?" என்று வினவினான். பிறகு இருவரும் உள்ளக் களிப்பில் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அந்த இருபது ஆண்டு இடைவெளியில் ஜிம்மி சற்று உயரமாகி விட்டதாக பாப் கூறினான். மகிழ்ச்சிக் களிப்பில் ஒருவரைப் பற்றி ஒருவர் உசாவிக் கொண்டு சிறிது தொலைவு நடந்து வந்நனர்.

ஒரு கடையின் அருகில் வந்தவுடன் அங்கிருந்த வெளிச்சத்தில் ஜிம்மியின் முகத்தைக் கண்டு பாப் திடுக்கிட்டான். தன்னுடன் இருப்பவன் தன்னுடைய உற்ற நண்பன் ஜிம்மி இல்லை என்பதனை அவன் உணர்ந்தான். பிறகு அவனின் கையை விலக்கி விட்டு, "இருபது ஆண்டு கால இடைவெளியில் ஒரு மனிதன் சற்று உயரமாவதற்கு வாய்ப்பு இருக்கிறதென்றும் ஆனால் ஒரு மனிதனுடைய மு°க்கின் புறத் தோற்றம் முழுமையாக மாறும் அளவிற்கு அஃதொன்றும் பெரிய இடைவெளி இல்லை" என்றும் கூறினான்.

உடனே பாபுடனிருந்த அந்த மனிதன் பத்து நிமிடங்களுக்கு முன் பாப்பை அவன் சிறைப் பிடித்து விட்டதாகக் கூறினான். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட பாபிடம் அவன் ஒருத் தாளினைக் கொடுத்தான். அத்தாளில் பின் வருமாறு எழுதியிருந்தது:

"பாப் குறித்த நேரத்தில் நான் அங்கு வந்திருந்தேன். நீ உன் புகைக் குழாயினைப் பற்ற வைத்த போது உன் முகத்தினை என்னால் நன்கு காண முடிந்தது. மேலும், அம்முகமே நியு யார்க் நகர காவலர்களால் பெரிதும் தேடப்படும் முகம் என்பதனையும் உணர்ந்தேன். ஆனால், என்னால் அதைச் செய்ய இயலவில்லை அதனால் தான் என்னுடன் பணிபுரிபவரை அதனைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டேன் - ஜிம்மி வெல்சு"

இதனைப் படித்து முடித்தவுடன் பாபின் கை நடுங்கியது.

Wednesday, November 21, 2007

தனித் தமிழ்ச் சொற்கள்

நாள்: 22.11.2007

நம் தாய் மொழியாகியத் தமிழ், செம்மொழி நிலையை 2004ஆம் ஆண்டு அடைந்து விட்டது. தமிழர்களாகிய நாம் தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பேச்சு வழக்கிலும் இலக்கண வழக்கிலும் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்றன்று.

தமிழ் தாயின் தலைச்சிறந்த பிள்ளைகளான மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பரிதி மாற் கலைஞர், மறைமலை அடிகளார் மற்றும் அவர் மகள் திருமதி. நீலாம்பிகை அம்மையார் ஆகியோர் வித்திட்ட தனித் தமிழ் இயக்கம் இன்று ஆலமரமாக வளர்ந்து தமிழ் மொழிக்கு உயரிய நிலையாகிய செம்மொழி நிலையினைப் பெற்றுத் தந்துள்ளது. நாம் அவ்வாலமரத்தின் விழுதுகளாகத் திகழ்வதே தமிழ்த் தாய்க்கு நாம் பூட்டும் மங்காத அணிகலனாகும்.

மேற்குறிப்பிட்டுள்ள சான்றோர்களின் படைப்புகளை படித்து அவைகளிலிருந்து நான் அறிந்துக் கொண்ட தனித் தமிழ்ச் சொற்களைத் தற்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். (பெரும்பாலானற்றை பாவாணர் அவர்களுடைய படைப்புகளிலிருந்தே நான் அறிந்துக் கொண்டேன். தமிழ்க் கூறும் நல்லுலகம் பாவாணர் அவர்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை
)


பிறமொழிச் சொற்கள்/இனிய தமிழ்ச் சொற்கள்

* பிரதம மந்திரி/தலைமை அமைச்சர்

* புதன் கிழமை/அறிவன் கிழமை

* சனிக் கிழமை/காரிக் கிழமை

* அபிஷேகம்/திருமுழுக்கு

* கும்பாபிஷேகம்/குடமுழுக்கு

* தேகம், சரீரம்/யாக்கை, உடல்

* சருமம்/தோல்

* இரத்தம்/குருதி

* அல்வா/தேங்கூழ்

* இரசம்/சாறு

* தம்பதியர்/வாழ்விணையர்

* Coffee/குளம்பி

* Tea/தேனீர்

* Almirah/அடுக்கு அறை

* சந்திரன்/நிலா, மதி

* பூஜை/வழிபாடு

* பாயாசம்/திருக்கண்ணமுது

* விபூதி/திருநீறு

* ஜலதோஷம்/நீர்க்கோவை

* ஜுரம்/காய்ச்சல்

* மாமிசம்/இறைச்சி

* வைச உணவு/மரக்கறி உணவு

* வீரம்/மறம்

* வேதம்/மறை

* சிருஷ்டி/படைப்பு

* அங்கம்/உறுப்பு

* தேசம்/நாடு

* நாசம், சேதம்/அழிவு

* பலம்/ஆற்றல்

* சம்பந்தி/மருவினோர்

* ஜாதி/வகுப்புப் பரிவு

* ஜாதகம்/பிறப்புப் குறிப்பு

* மரணம்/இறப்பு

* ஜனனம்/பிறப்பு

* நட்சத்திரம்/திருக்கோள்

* யோகம்/நல்லோரை

* லக்னம்/நன்முழுத்தம்

* சித்தம்/உள்ளம்

* பக்ஷி/பறவை

* விருக்ஷம்/மரம்

* நதி/ஆறு

* லாபம்/வருமானம்

* லஞ்சம்/கையூட்டு

* பாக்கியம், புண்ணியம்/நற்பேறு

* அதிர்ஷ்டம்/நல் ஊழ்

* சூரியன்/கதிரவன், பரிதி

* துர்திஷ்டம்/தீயூழ்

* ஷணம்/நொடிப் பொழுது

* நிபுணர்/வல்லுநர்

* நாகம்/பாம்பு

* கிரி/குன்று

* கர்மம்/வினை

* கருணை/தண்ணளி

* சக்கரம்/திகிரி

* யாகம்/வேள்வி

* சோதனை/ஆய்வு

* வாயு/வளி, காற்று

* சகோதரர்/உடன் வயிற்றோர்

* உதிரம்/குருதி

* உதரம்/வயிறு

* குணம்/பண்பு

* ஞாபக சக்தி/நினைவு ஆற்றல்

* ஓதுதல்/படித்தல்

* விவாகம்/திருமணம்

* இரட்சித்தல்/பாதுகாத்தல்

* பிரார்தனை/வேண்டுதல்

* நமஸ்காரம்/வணக்கம்

* வார்த்தை/சொல், கிளவி, மொழி

* தினம்/நாள்

* ஆசிர்வாதம்/அருள்

* சாஸ்திரி/கலைஞர்

* சபை/அவை

* நீதிபதி/மெய் காண்

* பதி/அரசன்

* ஸ்நானம்/குளியல்

* ஆஸ்தி, சொத்து/உடைமை

* ஆசை/விருப்பம்

* பிச்சை/யாசகம்

* பிரதி வாரம்/வாரந்தோறும்

* குஞ்சித பாதம்/தூக்கியத் திருவடி

* புத்தகம்/நூல்

* வியாபாரம்/வணிகம்

* தாமதம்/காலம் தாழ்த்துதல்

* சேவை/தொண்டு

* சகாயம்/உதவி

* ஆகாயம்/வானம்

* ராத்திரி/இரவு

* மத்யானம்/நண்பகல்

* சப்தம்/ஒலி

* ஆகாரம்/உணவு

* விமானம்/வானூர்தி

* அதிகாரம்/ஆட்சி உரிமை

* திருஷ்டி/கண்ணேறு

* ஜனாதிபதி/குடியரசுத் தலைவர்

* விஞ்ஞானம்/அறிவியல்

* வாக்கியம்/சொற்றொடர்

* பிரசங்கம்/சொற்பொழி

* துவிபாஷி/இருமொழியாளர்

* துவஜஸ்கம்பம்/கொடி மரம்

* ராஜா/அரசன், மன்னன்

* ராணி/அரசி

* மந்திரி/அமைச்சர்

* வாகனம்/ஊர்தி

* புத்தி/அறிவு

* சிகை/தலை

* அலங்காரம்/அணி

* வேகம்/விரைவு

* வீரம்/மறம்

* தானம், தருமம்/கொடை

இறைவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்
- திருக்குர்ஆன்

Monday, November 19, 2007

நான் படித்து வியந்த ஒன்று

நாள்: 19.11.2007

இவண் நான் படித்து வியந்த ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதில் எனக்கு உறுதியான உட்னபாடு இருப்பதனால்!

2003ஆம் ஆண்டு கோடை விடுமுறையின் போது, நான் சென்னை அசோக் நகரிலுள்ள தேவநேயப் பாவாணர் கிளைப் படிப்பக்கத்திற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு அப்போது என் கண்களுக்கு தென்பட்டது, சிலம்போ சிலம்பு. அதன் ஆசிரியர் சுந்தர சண்முகனார். ஆசிரியர் அவர்கள் புதுவைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஆவார்கள். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தைப் பற்றிய அருமையான திறனாய்வு ஒன்றினை ஆசிரியர் அவர்கள் சிலம்போ சிலம்பு என்னும் தலைப்பில் வரைந்துள்ளார்கள்.

உண்மையில் நான் சிலப்பதிகாரத்தின் அருமை பெருமையினை முழுமையாக உணர்ந்தது அதனைப் படித்தப் பிறகே என்று கூறின் மிகையாகாது.

மேலும், அதில் சிலப்பதிகாரத்தைப் பற்றி மற்றும் அன்றி என்னற்ற தனித் தமிழ்ச் சொற்களையும் கற்றுக் கொண்டேன். அவை பின் வருமாறு:

பிறமொழிச் சொற்கள் / தனித் தமிழ்ச் சொற்கள்

* சாபம் / கெடுமொழி
* மந்திரம் / இறைமொழி
* ஜெபித்தல் / உருவேற்றுதல்
* நவரத்தினம் / ஒன்பான் மணிகள்
* சம்பந்தி / மருவினோர்
* மரண தண்டனை / இறப்பு ஒறுப்பு
* கதாபாத்திரம் / கதை உறுப்பு
* சிகிச்சை / அறுவை

முழுக்க முழுக்க ஆசிரியர் அவர்கள் தனித் தமிழ்ச் சொற்களையே கையாண்டுள்ளார்கள். செந்தமிழ் அவர் எழுத்துக்களில் குழந்தை போல் தவழ்கிறது.

வெவ்வேறு தலைப்புகளில் ஆசிரியர் அவர்கள் சிலம்பினைத் திறம்பட ஆய்வு செய்து நற்றமிழ் விருந்தினைப் படிப்பவர்களுக்குப் படைத்துள்ளார்கள். சமணத் துறவியால் எழுதப்பட்டிருப்பினும், சிலப்பதிகாரத்தில் மத நல்லிணக்கம் எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக ஆசிரியர் அவர்கள் மன்னன் ஒருவன் போருக்குச் செல்லும் காட்சியினைச் சுட்டிக் காட்டுகிறார். இளங்கோவடிகள் கையாண்டுள்ள அடுக்கு மொழிகளுக்குச் சான்றாக மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியின் அழகினை விவரிப்பதனைக் குறிப்பிடுகிறார். சிலம்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறிகளைத்(சகுனங்களை) தெளிவாக விவரிக்கிறார். சிலம்பில் உள்ள காவிரி ஆற்றின் பெருமையினையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. தமிழ்ப் பார்ப்பனர் இனம் பற்றியும் சிலம்பைக் கொண்டு ஆசிரியர் அவர்கள் விளக்குகிறார்கள்.

நான் இறுதியாகச் சொல்ல விரும்புவது யாதெனின், தமிழை விரும்புவோர் உறுதியாக இதனை விரும்புவர். சென்னை வானதி பதிப்பகத்தார் இதனை வெளியிட்டுள்ளனர். இப்பதிப்பகம் சென்னை தி. நகரில் தீனதயாளுத் தெருவில் அமைந்துள்ளது.

Tuesday, September 18, 2007

ஒரு நாள் ஒரு குறள்

நாள்: 19.09.2007


இனிய உளவாக வின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

அதிகாரம்: இனியவைக் கூறல்

பொருள்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து தகாத சொற்களைப் பயன்படுத்தும் செயலானது நல்ல சுவையுள்ள கனியிருக்கும் போது அதனை விடுத்து காயினை நாடுவதற்கு ஒப்பாகும்

Monday, September 17, 2007

நான் தமிழில் மொழிபெயர்த்தக் கதை

நாள்: 17.09.2007

(இச்சிறுகதை "சிலியில் ஒரு நிலநடுக்கம்" என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புச் சிறுகதைப் பகுதியில் "தீக்கதிர்" என்னும் தமிழ் நாளிதழின் ஞாயிற்றுக் கிழமை இணைப்பான் "வண்ணக்கதிரில்" 16.09.2007 அன்று பக்க எண்கள் 3 மற்றும் 4ல் வெளிவந்தது. இந்நேரத்தில், மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய என் தமிழ்ப் பேராசிரியை, பண்டாரகர். (திருமதி). பத்மாவதி விவேகானந்தன் (தமிழ்ப் பேராசிரியை, மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை 24) அவர்ளுக்கும் "தீக்கதிர்" நாளிதழ்க் குழுவினர் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.)


சிலி, ஐரோப்பிய மொழியான ஸ்பானிசு மொழியினைப் பெரும்பான்மையாகப் பேசும் மக்களையுடைய தென் அமெரிக்க நாடு. அந்நாட்டினை 1647 ஆம் ஆண்டில் ஒரு நில நடுக்கம் உலுக்கியது. அந்நேரம் அங்கு நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்ச்சியினைக் கருவாக்கி ஜெர்மானிய மொழியில் சிறுகதையாக எழுதினார் என்ரிச் வான்க் கெளயிஸ்ட் (1777 / 1811). அச்சிறுகதையின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து இக்கதை தமிழில் தரப்படுகிறது. பண்பாட்டுப் பிதபோக்குத்தனங்களின் மானுட விரோத முகத்தைக் காட்டுகிற இக்கதை ஆங்கிலத்தில் எவ்வாறு சுருக்கமாக மறுபதிப்பு செய்யப்பட்டதோ அதே நடையில் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது.

சிறையில் ஜெரோனிமோ ருகேரா தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க முயல்கிறான்.

டான் ஆஸ்டிரான் என்பவரின் மகள் ஜோஸபெவிற்கு ஆசிரியனாக பணியாற்றி வந்தவன் அவன். ஆசிரியனான அவன் நாளடைவில் காதலனாகவும் ஆனான். அவர்களுடைய காதல் உறவை ஜோஸபெவின் வீட்டார் அறிந்தவுடன் ஜெரோனிமோவைத் துரத்தி அடித்தனர். அதன் பின்னரும் ஜோஸபெவின் உடன் வயிற்றோன் (சகோதரன்) அறிந்துக் கொள்ளும் வரை அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆத்திரத்தில் பொங்கிய ஆஸ்டிரான் தன் மகளைத் தேவாலயத்தில் சேர்த்து விட்டார். அங்கேயும் அவர்கள் காதல் தொடர்ந்தது. களவியலின் விளைவாக தேவாலயத்தின் வாயிற் படிகளில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் ஜோஸபெ. அந்தக் குழந்தைதான் பிலிப்.

செய்தியினைக் கேட்டுப் பெரிதும் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஜோஸபெவிற்கு இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கினர். ஜோஸபெவிற்கான ஒறுப்பினை நிறைவேற்றுவதற்காக ஒரு நாள் அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த ஊர்வலத்தின் இரைச்சலை, சிறைக்குள்ளிருந்து கேட்ட போதுதான் ஜெரோனிமோ தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்வதற்கு முயல்கிறான். அவன் தூக்குக் கயிற்றினைத் தன் கழுத்தில் போட முயலும் தருவாயில் பெரும் நிலநடுக்கம் ஊரையே குலுக்குகிறது. அந்த நிலநடுக்கமே அவனைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது.

ஜோஸபெவை எண்ணிப் பெரிதும் வருந்தகிற அவன் ஊர் மக்களின் அவல நிலைக்கு நடுவில் அங்கும் இங்குமாக ஜோஸபெவைத் தேடி அலைகிறான். அன்று மாலை அவளைத் தன் மகனுடன் ஒரு குட்டைக்கு அருகில் கண்டு பிடிக்கிறான். அவர்களுடன் மகிழ்ச்சியாக இணைகிறான்.

ஜோஸபெ ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்ட நேரத்தில் நிலநடுக்கம் தாக்கியது, அது அவள் தப்பிக்க ஏதுவாயிற்று என்பதை அவளிடமிருந்து கேட்டுத் தெரிந்துக் கொண்டான். தேவாலயத்தில் ஒரு கன்னித் துறவியிடம், தான் ஒப்படைத்திருந்த மகனை மீட்டு வரச் சென்றதையும் அங்கு அக்கன்னி உட்பட ஏனையவர் அனைவரும் நிலநடுக்கத்தின் தாக்குதலில் இறந்து விட்டிருந்ததையும், தன் மகனை அங்கிருந்து எளிதில் மீட்டு வரமுடிந்ததையும் அவனிடம் சொல்கிறாள் ஜோஸபெ.

மகிழ்ச்சியின் எல்லையிலிருந்த அவர்கள், ஜோஸபெவின் பெற்றோர் வாழும் லா கன்செப்சியான் நகரத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று தங்களுடைய வாழ்நாளைக் கழிக்க முடிவு செய்கின்றனர்.

நில நடுக்கத்தின் தாக்குதலிருந்து மீளாத ஊர் மக்கள் தெருக்களிலேயே இருக்கின்றனர். அப்போது பச்சிளங் குழந்தையான் ஜீவான் பசியால் அழுகிறான். அக்குழந்தையின் தந்தை டான் ஃபெர்னான்டோ, தன் குழந்தைக்குப் பாலூட்டும் நிலையில் இல்லாத அளவிற்கு தன் மனைவி டான் எல்விரா அடிபட்டிருக்கிறாள் என்பதை ஜோஸபெவிடம் விளக்குகிறார். அவளே தன் குழந்தைக்கு பாலூட்ட வேண்டுமென்று வேண்டுகிறான்.

ஜோஸபெவும் மகிழ்ச்சியுடன் அதற்கிசைந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறான். பூரித்துப் போன டான் ஃபெர்னான்டோ, ஜோஸபெவையும் ஜெரோனிமோவையம் தன் குடும்பத்து மனிதர்களாகவே கருதுகிறார். அவர்களைத் தன் மாமனாரிடமும் மனைவியின் தங்கையான டோனா கான்ஸ்டான்சாவிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

நில நடுக்கத்தின் தாக்கத்திலருந்துத் தப்பிய அருகிலிருந்தத் தேவாலயம் ஒன்றில் அன்று மாலை வழிபாடு நடக்க உள்ளது என்பதனை எல்லோரும் அறிகின்றனர். பெர்னான்டோவின் மனைவியையும் மாமனாரையும் தவிர எல்லோரும் வழிப்பாட்டிற்கு்க கிளம்பிச் செல்கின்றனர். அவர்கள் கிளம்பும் போது பெர்னான்டோவின் மனைவி ஜெரோனிமோவிற்கும் ஜோஸபெவிற்கும் ஆபத்து நிகழக்கூடும் என்று எச்சரிக்கிறாள். அதனைப் பெரிதாகக் கருதாமல் பெர்னாண்டோ பிலிப்பைத் தூக்கிக் கொள்ள, ஜோஸபெ ஜீவானைத் தூக்கிவைத்துக் கொள்ள, ஜெரோனிமோ, டோனா கான்ஸ்டான்சா எல்லோரும் தேவாலாயத்திற்குப் பயணமாகிறார்கள்.

முதலில் விவிலியக் கதைகளைப் பற்றி விரித்துக் கூறப்பட்டுக் கொண்டிருந்த தேவாலயத்தில் சிறிது நேரத்தில் ஜெரோனிமோ மற்றும் ஜோஸபெ இருவரது குற்றம் பற்றி பேசப்படுகிறது. தங்களுக்கு உறுதியாக ஆபத்து நேரக்கூடும் என்பதனை உணரும் அவர்கள் ஆறுபேரும் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகிறார்கள்.

அப்போது கூட்டத்திலிருந்து முன்னால் வரும் ஜெரோனிமோவின் தகப்பன் அவனைக் கட்டையால் தாக்கிக் கொன்று விடுகிறார். ஜேரோனிமோவின் அருகில் நிற்கும் கன்ஸ்டோன்சா அஞ்சி நடுகங்குகிறாள். அதனைப் பார்க்கும் செருப்புத் தொழிலாளி ஒருவர் அவள் தான் ஜோஸபெ என்றெண்ணி அவளைத் தாக்கிக் கொல்கிறார். அதிர்ந்துபோகும் ஜோஸபெ தன் கையிலிருக்கும் பெர்னான்டோவின் குழந்தையை அவரிடமே கொடுத்து விட்டுத் தானே ஜோஸபெ என்று அறிவிக்கிறாள். அடுத்த நொடியே அவளும் தாக்கப்பட்டு இறக்கிறாள்.

இரண்டு குழந்தைகளை வைத்து நின்றுக் கொண்டிருக்கும் பெர்னான்டோவிடம், பாவத்தில் தோன்றியக் குழந்தை உயிருடன் இருத்தல் கூடாது என்றுக் தொலைவிலிருந்தக் கம்பத்தில் வீசி எறிந்துக் கொன்று விடுகிறது கும்பல். குழந்தை பிலிப்பை பெர்னான்டோவும் அவர் மனைவியும் தங்கள் மகனாக மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டுச் செல்கின்றனர்......

The English version of the story is available @

http://en.wikipedia.org/wiki/The_Earthquake_in_Chile

ஒரு நாள் ஒரு குறள் - 3

நாள்: 17.09.2007


இன்னா செய்தாரை யொருத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அதிகாரம்: இன்னா செய்யாமை

Saturday, September 15, 2007

ஒரு நாள் ஒரு குறள் - 2

நாள்: 15.09.2007

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை

அதிகாரம்: ஊக்கமுடைமை

பொருள்:

அதிர் - வழி

அயராத ஊக்கம் உடையாரின் உழைப்பானது என்றும் ஆக்கத்தின் வழியலேயே செல்லும்
என்பதே இக்குறளின் பொருளாகும்.

Friday, September 14, 2007

தமிழில் தொழில்நுட்பச் சொற்கள்

நாள்: 14.09.2007







தமிழ்ச் சொற்கள்/ஆங்கில இணைகள்







* மின் வாய்/Electrode




* நேர் அயனி/Cation




* எதிர் அயனி/Anion




* வளி மண்டல அழுத்தம்/Atmospheric Pressure




* ஆவி அழுத்தம்/Vapour Pressure




* புற ஊதாக் கதிர்கள்/Ultra Violet rays




* அகச் சிவப்புக் கதிர்கள்/Infra red rays




* அலை நீலம்/Wavelength




* வண்ணப்பட்டை/நிறமாலை மானி/Spectrometer




* நிறமாலை/Spectrum




* நுண்நோக்கி/Microscope




* தொலை நோக்கி/Telescope




* வெப்ப இயக்க இயல்/Thermodynamics




* மாறிலி/Constant




* மாறி/Variable




* வினைப்படு பொருள்/Reactant




* விளைப் பொருள்/Product




* வினை/Reaction




* வெப்ப உமிழ் வினை/Exothermic reaction




* வெப்பக் கொள் வினை/Endothermic reaction




* வலஞ்சுழி/Clockwise




* இடஞ்சுழி/Anti-clockwise




* வீழ் படிவு/Precipitate




* மின்னாற் பகுத்தல்/Electrolysis




* நீராற் பகுத்தல்/Hydrolysis




* நேர்மின் முனை/Anode




* எதிர்மின் முனை/Cathode




* உலோகம்/Metal




* உலோகப் போலி/Metalloid




* அலோகம்/Non-metal




* வெச்வீயம்/Lead




* வெள்ளீயம்/Tin




* தாமிரம்/Copper




* பாதரசம்/Mercury




* வினை ஊக்கி/Catalyst




* சிறு கரண்டி/Spatula




* ஆய்வுக் குழாய்/Test tube




* ஆய்வு அறை/Laboratory







* காட்டி/Indicator




* தரம் பார்த்தல்/Titration




* விரை கடைவுப் பொறி/Centrifuging Machine




* அலகு/Unit




* மின் தடை/Resistance




* முன்நோக்கு வினை/Forward reaction




* பின்நோக்கு வினை/Reverse (or) Backward reaction




* உட்கரு/Nucleuse




* கதிரியக்கம்/Radio activity




* பருமன் அறி பகுத்தாய்வு/Volumetric analysis




* எடையறி பகுத்தாய்வு/Gravimetric analysis




* மு°லக்கூறு/Molecule




* மு°லக்கூறு சல்லடைகள்/Molecular sieves




* சமன்பாடு/Equation




* மின்காந்த அலை/Electromagnetic radiation




* புவி ஈர்ப்பு விசை/Gravitational Force







* கொதி நிலை/Boiling point




* உருகு நிலை/Melting point




* உறை நிலை/Freezing point




* ஆக்ஸிஜனேற்ற நிலை/Oxidation state




* கரைசல்/Solution




* அடர்ந்த கரைசல்/Concentrated Solution




* நீர்த்த கரைசல்/Dilute Solution




* கரைப்பான்/Solvent




* கரைப்படு பொருள்/Solute




* அமிலம்/Acid




* காரம்/Alkali




* வேதி மாற்றம்/Chemical change




* ஆக்ஸிஜன் ஒடுக்கம்/Reduction




* குறுக்க வினை/Condensation reaction




* சேர்மங்கள்/Compounds




* பிணைப்பு/Bond




* அயனி பிணைப்பு/Ionic bond




* சம பிணைப்பு/Covalent bond




* அணைவுச் சேர்மங்கள்/Coordination compounds




* துத்தநாகம்/Zinc




* தனிமம்/Element




* தாது/Ore




* கூழ்மம்/Colloid




* பனிக்கூழ்மம்/Ice-cream







* காய்ச்சி வடித்தல்/Distillation




* தனி ஆல்கஹால்/Absolute alcohol




* உயிர் வளி/Oxygen




* கரிக்காற்று/Carbon




* பச்சயம்/Chlorophyll




* ஒளிச்சேர்க்கை/Photosynthesis







* திட நிலை/Solid state




* நீர்ம நிலை/Liquid state







* கிளிர்ச்சியுற்ற நிலை/Excited state





* கந்தக அமிலம்/Sulphuric acid



* கந்தகம்/Sulphur





* உணர்வகற்றி/Anaesthetic



* ஒவ்வாமை/Allergy



* வேதிப் பண்புகள்/Chemical properties



* வலி நீக்கி/Analgesic
















































தமிழ்ச் சொற்களும் ஆங்கில இணைகளும்

நாள்: 14.09.2007





தமிழ்ச் சொற்கள்/English Equivalents




* உயிரியல்/Biology




* விலங்கியல்/Zoology




* தாவரவியல்/Botany




* வேதியியல்/Chemistry




* இயற்பியல்/Physics




* புவியியல்/Geography




* வரலாறு/History




* நிலப்பொதியியல்/Geology




* உளவியல்/Psychology




* அரசு அறிவியல்/Political Science




* கணக்கியல்/Accountancy




* வங்கியியல்/Banking




* புள்ளியியல்/Statistics




* உடற்கூறு/Anatomy




* மரபியல்/Genetics




* மரபுப் பொறியியல்/Genetic Engineering




* கனிம வேதியியல்/Inorganic Chemistry




* கரிம வேதியியல்/Organic Chemistry




* இயல்பு வேதியியல்/Physical Chemistry




* மருந்தாக்க வேதியியல்/Pharmaceutical Chemistry

தமிழில் மின் அஞ்சல்

நாள்: 14.09.2007



தங்கள் தாய்மொழியாகியத் தமிழ் மொழியிலேயே மின்அஞ்சல் அனுப்ப விரும்புபவர்கள், கீழே உள்ள இணையத்தள முகவரியினைக் கொண்டு தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்பலாம்.



http://www.higopi.com/ucedit/Tamil.html



எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் மங்காதத் தமிழ் என்று சங்கே முழங்கு!

Thursday, September 13, 2007

ஒரு நாள் ஒரு குறள்

நாள்: 14.09.2007



எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு



அதிகாரம்: செய்நன்றியறிதல்

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

  Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil ...