Tuesday, January 2, 2018

இறைவனின் உள்ளக் கிடக்கை

ஒரு முறை திருநாவுக்கரச பெருமானும், திருஞானசம்பந்த பெருமானும் சேர்ந்து பல்வேறு திருக்கோயில்களில் தம்முடைய இறைப்பணிகளை முடித்துவிட்டு, இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு திருக்கோயிலை வந்தடைந்தனர்.  அவர்கள் இருவரும் நேரம் தாழ்ந்து வந்தமையால், திருக்கோயிலின் நடை அடைக்கப்பட்டுவிட்டது.

அவர்கள் இருவரும் வேறு எங்கும் செல்ல விழையாது இறைவன் சிவபெருமானிடமே தம் அருட் பாக்களால் மன்றாடி திருக்கோயிலின் கதவுகளைத் திறக்க வைக்க முடிவெடுத்தனர்.  திருஞானசம்பந்த பெருமான் ஒரே ஒரு பாடல் பாடியவுடன் இறைவன் மனமுவந்து திருக்கோயிலின் கதவுகளைத் திறந்தார்.

இருவரும் மகிழ்ச்சியுடன் திருக்கோயிலுக்குள் சென்றனர்.  பிறகு திருக்கோயிலின் கதவுகளை அடைப்பதற்காக திருநாவுக்கரச பெருமான் இறைவனிடம் தம் திருப்பாடல்களால் மன்றாடினார்.  அவர் பத்து பாடல்கள் பாடிய பின்னரே ஈசன் திருக்கோயிலின் கதவுகளை அடைத்தார்.

திருஞானசம்பந்த பெருமான் ஒரே ஒரு பாடல் பாடியவுடன் ஈசன் திருக்கோயிலின் கதவுகளைத் திறந்துவிட்டதையும் தாம் பத்து பாடல்கள் பாடிய பின்னரே சிவனார் திருக்கோயிலின் கதவுகளை அடைத்ததையும் கண்டு திருநாவுக்கரச பெருமான் மனம் வெதும்பினார்.

இதனை உணர்ந்த சிவபெருமான் அடியாரின் மன வாட்டத்தை போக்க வானத்தில் தோன்றி பின் வருமாறு உரைத்தார், "நாவுக்கரசரே! உம் தமிழின் சுவையில் யாம் மயங்கினோம்.  உம் தமிழின் தெவிட்டாத சுவையில் சற்று கூடுதலான  நேரம் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காகவே யாம் நீவிர் பத்து பாடல்கள் பாடிய பின்னரே திருக்கோயிலின் வாயிற் கதவுகளை அடைத்தோம்."

ஆதலால், இந்த புத்தாண்டு முதல் நம் விருப்பம் ஈடேறவில்லை என்றால் இறைவன் நமக்கு அருள்புரியவில்லை என்று கருதாமல் அவர் நாம் விரும்பியதை விடச் சிறந்த ஒன்றை நமக்குத் தருவார் என்ற உறுதியுடன் அனைவரும் இருக்க வேண்டுகிறேன்.  நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!  சிற்றம்பலமே சிந்தை பலம்!

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

  Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil ...