சென்னை,
12.03.2021
என் அன்பிற்கினிய மகள்களுக்கு,
உங்கள் அன்பு அம்மா வரையும் மடல். இம்மடல் மு°லம் உங்கள் இருவருக்கும் மேலாண்மைக் கல்வியின் முதல் மற்றும் மிக அடிப்படையான பாடத்தினைக் கற்றுக் கொடுக்க விழைகிறேன்.
மேலாண்மைக் கல்வியின் முதல் பாடம் யாதெனின், இல்லை என்று சொல்லக் கற்றுக் கொள். என்ன? ஏதும் புரியவில்லையா உங்கள் இருவருக்கும்? இல்லை என்று சொல்லக் கற்றுக் கொள்வது தான் முதல் பாடமா என்று நீங்கள் இருவரும் வியப்பால் பீடிக்கப்பட்டுவிட்டீர்களா? நிற்க! இதனை விளக்க ஓர் உண்மை நிகழ்வினை இவண் காணலாம்.
இன்று 'சோனி' என்னும் ஜப்பான் நாட்டு நிறுவனம் உலகறிந்த மற்றும் உலகம் போற்றும் மின் மற்றும் மின்னணு கருவிகள் வடிவமைக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. நம் வீட்டிலும் மற்றும் நம் எண்ணற்ற உறவினர்கள் வீட்டிலும் அந்நிறுவனத்தின் தொலைக்காட்சியிருப்பதை நீங்கள் இருவரும் அறிவீர்கள். ஆனால் இன்று ஆலமரம் போல் அந்நிறுவனம் செழித்து விளங்க என்ன காரணம் தெரியுமா?
சோனி நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் ஒரு ஜப்பானிய பொறியியல் வல்லுநர். அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறந்த Transistor கருவி ஒன்றை வடிவமைத்து, அதனைத் தயாரித்து சந்தையில் வெளியிட அமெரிக்க நிறுவனம் ஒன்றின் உதவியை நாடினார். அக்கருவியைப் பற்றி அறிந்திராத காலம் அது. அந்த அமெரிக்க நிறுவனம் அவர் வடிவமைத்த அக்கருவியை தயாரித்து சந்தையில் வெளிவிட விழைந்தது. ஆனால் அதை தங்கள் நிறுவனத்தின் பெயரில் தான் வெளியிடுவோம் என நிபந்தனை விதித்து அதற்கு அவருக்குப் பெரும் பொருள் வழங்குவதாகவும் கூறியது.
அவர்கள் விதித்த நிபந்தனையை ஒரு நிமிடம் ஆலோசித்த அந்ந ஜப்பானியர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பிறகு ஜப்பான் நாட்டு மன்னருக்கு ஒரு விளக்கமான கடிதம் வரைந்து அதில் அவர் வடிவமைத்த அக்கருவியினை பெருமளவில் தயாரித்து சந்தையில் வெளியிட ஜப்பான் அரசாங்கம் அவருக்குப் பொருளுதவி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். அவ்வாறு ஜப்பான் அரசாங்கம் அவருக்கு உதவ தவறினால் தன் சொந்த நாட்டின் மு°ளை மற்றும் பொருளாதாரத்தினை அமெரிக்காவிற்கு ஜப்பான் அடகு வைக்க நேரிடும் என்றும் தெளிவாக இயம்பினார்.
ஜப்பான் அரசாங்கம் அவர் வேண்டுகோளுக்கு இணங்கியது. பின்னர் சோனி என்னும் நிறுவனத்தின் விதை ஜப்பானில் விதைக்கப்பட்டு இன்று உலக அரங்கில் அந்நிறுவனம் ஆலமரமாகத் திகழ்கிறது!
என்ன மகள்களே! மேலாண்மைக் கல்வியின் முதல் பாடம் பசுமரத்தாணி போல் உங்கள் உள்ளத்தில் பதிந்து விட்டதா? உங்கள் தன்னம்பிக்கைக்கு மாறாக நடக்கும் ஒன்றை ஏற்காது திடமாக 'இல்லை' என்று கூறி மறுப்பீர்கள் என நம்புகிறேன். மற்றவை அடுத்த மடலில்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு அன்னை
No comments:
Post a Comment