Monday, November 19, 2007

நான் படித்து வியந்த ஒன்று

நாள்: 19.11.2007

இவண் நான் படித்து வியந்த ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதில் எனக்கு உறுதியான உட்னபாடு இருப்பதனால்!

2003ஆம் ஆண்டு கோடை விடுமுறையின் போது, நான் சென்னை அசோக் நகரிலுள்ள தேவநேயப் பாவாணர் கிளைப் படிப்பக்கத்திற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு அப்போது என் கண்களுக்கு தென்பட்டது, சிலம்போ சிலம்பு. அதன் ஆசிரியர் சுந்தர சண்முகனார். ஆசிரியர் அவர்கள் புதுவைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஆவார்கள். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தைப் பற்றிய அருமையான திறனாய்வு ஒன்றினை ஆசிரியர் அவர்கள் சிலம்போ சிலம்பு என்னும் தலைப்பில் வரைந்துள்ளார்கள்.

உண்மையில் நான் சிலப்பதிகாரத்தின் அருமை பெருமையினை முழுமையாக உணர்ந்தது அதனைப் படித்தப் பிறகே என்று கூறின் மிகையாகாது.

மேலும், அதில் சிலப்பதிகாரத்தைப் பற்றி மற்றும் அன்றி என்னற்ற தனித் தமிழ்ச் சொற்களையும் கற்றுக் கொண்டேன். அவை பின் வருமாறு:

பிறமொழிச் சொற்கள் / தனித் தமிழ்ச் சொற்கள்

* சாபம் / கெடுமொழி
* மந்திரம் / இறைமொழி
* ஜெபித்தல் / உருவேற்றுதல்
* நவரத்தினம் / ஒன்பான் மணிகள்
* சம்பந்தி / மருவினோர்
* மரண தண்டனை / இறப்பு ஒறுப்பு
* கதாபாத்திரம் / கதை உறுப்பு
* சிகிச்சை / அறுவை

முழுக்க முழுக்க ஆசிரியர் அவர்கள் தனித் தமிழ்ச் சொற்களையே கையாண்டுள்ளார்கள். செந்தமிழ் அவர் எழுத்துக்களில் குழந்தை போல் தவழ்கிறது.

வெவ்வேறு தலைப்புகளில் ஆசிரியர் அவர்கள் சிலம்பினைத் திறம்பட ஆய்வு செய்து நற்றமிழ் விருந்தினைப் படிப்பவர்களுக்குப் படைத்துள்ளார்கள். சமணத் துறவியால் எழுதப்பட்டிருப்பினும், சிலப்பதிகாரத்தில் மத நல்லிணக்கம் எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக ஆசிரியர் அவர்கள் மன்னன் ஒருவன் போருக்குச் செல்லும் காட்சியினைச் சுட்டிக் காட்டுகிறார். இளங்கோவடிகள் கையாண்டுள்ள அடுக்கு மொழிகளுக்குச் சான்றாக மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியின் அழகினை விவரிப்பதனைக் குறிப்பிடுகிறார். சிலம்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறிகளைத்(சகுனங்களை) தெளிவாக விவரிக்கிறார். சிலம்பில் உள்ள காவிரி ஆற்றின் பெருமையினையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. தமிழ்ப் பார்ப்பனர் இனம் பற்றியும் சிலம்பைக் கொண்டு ஆசிரியர் அவர்கள் விளக்குகிறார்கள்.

நான் இறுதியாகச் சொல்ல விரும்புவது யாதெனின், தமிழை விரும்புவோர் உறுதியாக இதனை விரும்புவர். சென்னை வானதி பதிப்பகத்தார் இதனை வெளியிட்டுள்ளனர். இப்பதிப்பகம் சென்னை தி. நகரில் தீனதயாளுத் தெருவில் அமைந்துள்ளது.

2 comments:

அருள் கி said...
This comment has been removed by the author.
அருள் கி said...

அம்மையாரே,

இவ்விடுகையை ஓர் ஆண்டுக்கு முன்னர் இட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் எழுதுகிறேன். நானும் தனித் தமிழ் விரும்பியே. ஆனால் நீங்கள் தமிழ்ச் சொற்களையெல்லாம் வடமொழி என்று நிறுவுகிறீரே சாவம்(சாவு+அம்), மந்திரம், மரணம், தண்டனை எல்லாம் தமிழே. சிகிச்சை என்பதை பண்டுவம் என்று தமிழில் எழுதுவர்.

எனது வேண்டுகோள் இது தான். தமிழின் சொல் வளத்தை சுருக்கி விடாதீர். பாவாணார், அருளி, இளங்குமரன், இராம்.கி போன்றோரின் ஏடுகளை நிறைய படியுங்கள். மற்றபடி உங்கள் தனித்தமிழ் ஆர்வத்தினை மனம் நெகிழ பாராட்டுகிறேன்.

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

  Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil ...